×

மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள கோயம்புத்தூர், குமரகுரு கல்வி நிறுவனத்தை சேர்ந்த மாணவர் குழுவுக்கு அரசின் சார்பில் உதவித் தொகையாக ரூ.15 லட்சம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.இந்த ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆற்றல் படகு சவாலில் கலந்து கொள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த குமரகுரு பொறியியல் கல்லூரியின் 10 மாணாக்கர்களை கொண்ட டீம் சீ சக்தி குழு தேர்வான ஒரே இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்பினை ஊக்குவித்து ஐரோப்பாவில் நடைபெறவுள்ள சர்வதேச ஆற்றல் படகு சவாலில் கலந்து கொள்ள உதவித்தொகையாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்ககம் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் குமரகுரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் குழுவுக்கு வழங்கினர்.

இந்த மாணவர் குழு நாட்டிலேயே முதல்முறையாக ஹைட்ரஜன் எரிபொருளை கொண்டு இயங்கும் படகை வடிவமைத்துள்ளனர். இக்குழு இத்தாலி, கனடா, துபாய், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உட்பட 10 நாடுகளை சேர்ந்த 17 அணிகளுடன் போட்டியிட உள்ளனர்.இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் இயக்குநர் சிவராஜா ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மொனாக்கோ ஆற்றல் படகு சவாலில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் குழுவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Monaco Power Boat Challenge ,Chief Minister ,M.K.Stalin. ,Chennai ,Kumaraguru Educational Institute ,Coimbatore ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...